×

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்கள் தடுக்கும் வழிகள்: மருத்துவர் வழங்கும் ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு மேல் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. பருவகால மாற்றத்தின் காரணமாக கோடை காலம் மற்றும் குளிர்காலம் என மாறி, மாறி வருகிறது. பூமி, சூரியனை வலம் வரும்போது 23 டிகிரி கோணத்தில் சாய்ந்திருப்பதால்தான் இந்த மாற்றம் ஏற்படுகிறது. பூமத்திய ரேகைக்கு வடபகுதியில் இருப்பது வடக்கு அரைகோளம். தெற்கு பகுதியில் இருப்பது தெற்கு அரைகோளம். சூரியனின் நேர் கதிர்கள் தெற்கு அரைகோளத்தில் விழும்போது குளிர்காலம் வருகிறது. இந்தியாவில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியனின் சாய் கிரணங்கள் நமது நிலப்பகுதியின் மீது விழும். அதன் காரணமாக நிலப்பகுதி அதிகமாக வெப்பம் அடைவதில்லை. இதனால் இந்த மாதங்களை குளிர்கால மாதங்கள் என்கிறோம். இதுபோன்ற வெப்பநிலை மாற்றத்துடன் ஏராளமான வைரஸ்கள், நோய்கள் அதிகரிக்கின்றது. குளிர்காலம் அனைவரையும் மந்தமாக உணரச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

இதுபோன்ற வானிலை மாற்றங்களின் போது மூச்சுத்திணறல், அதிக காய்ச்சலின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதை தாமதிக்க கூடாது எனவும், குளிர்காலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து சென்னை, க்ளீனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை ஆலோசகரும், பொது மருத்துவருமான டாக்டர் அஃப்ரின் ஷபீர் கூறியதாவது: மிகவும் பொதுவான குளிர்கால நோய்கள் என்றால்,
சாதாரண சளி: குளிர்காலம் என்றாலே பலருக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்படுகிறது. மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு மற்றும் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். இது வழக்கமாக சில நாட்களில் சரியாகிவிடும். இதற்கு தீவிர மருத்துவ சிகிச்சை தேவையில்லை. அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொண்டு சற்று ஓய்வெடுப்பதே இதற்கான சிகிச்சையாகும். கூடுதலாக, மருந்து மற்றும் நாசி ஸ்ப்ரேக்களை பயன்படுத்தும்போது இது விரைவில் குணமாகும்.

குளிர் காய்ச்சல்: இன்ஃப்ளூயன்ஸா அல்லது பொதுவான காய்ச்சல் என்பது வைரசால் ஏற்படும் ஒருவித தொற்று நோய். காய்ச்சல், இருமல், நெஞ்செரிச்சல், தசைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள். இது சில மணி நேரங்களில் அதிகரிக்கத் துவங்கிவிடும். நல்ல ஓய்வு மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவை இதில் இருந்து குணமாவதற்கான சிறந்த வழிமுறைகள் ஆகும். இருப்பினும், சில நேரங்களில் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

தொண்டை வலி: தொண்டை வலி என்பது கடுமையான தொண்டை புண் தொற்று ஆகும், இது மிகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இது முதன்மையாக பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. இது சிறு குழந்தைகளிடையே பொதுவாக ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உணவுகளை விழுங்குவதில் சிரமம் மற்றும் கழுத்தில் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

மூச்சுக்குழாய் அழற்சி: கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி என்பது மூச்சுக் குழாய்களின் வீக்கம் ஆகும், இது வாய், மூக்கு மற்றும் நுரையீரலை இணைக்கிறது. குளிர்காலங்களில் இது பொதுவாக ஏற்படும் நோய்களில் ஒன்றாகும். தொடர்ச்சியான இருமல், சளி ஆகியவை இதன் அறிகுறியாகும். பெரும்பாலான நோயாளிகளுக்கு, ஏழு முதல் பத்து நாட்களில் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும், ஆவி பிடித்தல் மற்றும் நல்ல ஓய்வெடுப்பதன் மூலமும் இந்த நோய் குணமாகும்.

நிமோனியா: நுரையீரலில் ஏற்படும் பொதுவான தொற்று, நிமோனியா. இருமல், தும்மல் மற்றும் சுவாசிப்பதில் கூட பிரச்னைகள் ஏற்படலாம். உங்களுக்கு மூச்சுத் திணறல் அல்லது தொடர்ந்து சளி மற்றும் அதிக காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். இந்த நுரையீரல் தொற்று வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படுகிறது, இது வயது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய்த்தொற்றின் வகை போன்ற காரணிகளைப் பொறுத்து லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இது, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கடுமையாகப் பாதிக்கும். ஆர்எஸ்வி – சுவாச ஒத்திசைவு வைரஸ்: காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் மார்பு பாரம் ஆகியவை குறிப்பிட்ட நபர்களுக்கு ஏற்படுகின்றன. இது மோசமான சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கிறது. இதற்கு தனிமைப்படுத்துதல் சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். ஆஸ்துமா மற்றும் சிஓபிடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த பருவங்களில் மோசமான அறிகுறிகள் அதிகரிக்கும். இவர்களுக்கு குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் சில யோசனைகள்…
* தடுப்பூசி போடுங்கள்: குளிர்காலத்தில் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம். இது காய்ச்சல் ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. நிமோனியா தடுப்பூசி இதற்கு உதவுகிறது.
* கைகளை நன்றாக கழுவுங்கள்: குறிப்பாக உணவு சாப்பிடுவதற்கு முன்பும், வெளி இடங்களில் இருந்த வீட்டிற்கு வந்தவுடன் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். அவ்வாறு செய்யும்போது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்: பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க போதுமான தூக்கம் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* சரியான உடைகளை அணியுங்கள்: குறிப்பாக வெளியில் செல்லும் போது, சூடாக இருக்க பொருத்தமான ஆடைகளை அணிவது கட்டாயம். மேலும் சுவாச பிரச்னைகளை தவிர்க்க கடுமையான குளிரில் செல்லும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்.
* நோய் பாதித்தவர்களிடம் சற்று தள்ளி இருங்கள்: உங்களை சுற்றியுள்ள ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களின் நோய்த்தொற்று உங்களை பாதிக்காமல் இருக்க சற்று இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயம்.
* அதிக தண்ணீர் குடியுங்கள்: குளிர் காலமாக இருந்தாலும், உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவை. எனவே, ஆரோக்கியமாக இருக்க அதிக அளவிலான திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
* மன அழுத்தம் இன்றி இருங்கள்: குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக வருவதால் பலருக்கு மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். முடிந்தவரை சூரிய ஒளி உள்ள இடங்களில் இருக்க முயற்சிக்கவும், அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஒளி சிகிச்சை குறித்து ஆலோசிக்கவும்.
* சுறுசுறுப்பாக இருங்கள்: உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உட்புற விளையாட்டுகள் அல்லது குளிர்கால விளையாட்டுகள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
* உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்: வைரஸ் பரவலை தடுக்க உங்கள் வீடு மற்றும் பணியிடங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
* குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும் உணவுகள்: தானியங்கள், சூப்கள், பழங்கள், உலர் பழங்கள், மசாலா, தேன், நெய், சூடான பானங்கள்.
* குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்: குளிர் பானங்கள், குளிரூட்டப்பட்ட பழச்சாறுகள், வெண்ணெய், வறுத்த உணவுகள், இனிப்பு வகைகள், பாதுகாக்கப்பட்ட உணவுகள்.
* மருத்துவரை அணுகுங்கள்: உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில், நோய் பரவுவதைத் தடுக்கவும், தகுந்த சிகிச்சையைப் பெறவும் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இந்த குளிர்காலத்தில் உங்களுக்கு நோய் பாதிப்பின் அபாயம் வெகுவாக குறைக்கப்படும். அதேசமயம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத் தேவைகளும் வேறுபட்டவை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எனவே அவரவரின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது என்பது சிறந்த ஒன்றாக இருக்கும். இவ்வாறு டாக்டர் அஃப்ரின் ஷபீர் தெரிவித்தார்.

The post குளிர்காலத்தில் ஏற்படும் நோய்கள் தடுக்கும் வழிகள்: மருத்துவர் வழங்கும் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...